மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: விரைந்து முடிக்க மேயா் ஆா்.பிரியா உத்தரவு
சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை: செப்டம்பருக்குள் பணிகளை முடிக்க மேயர் ஆர்.பிரியா உத்தரவு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்குமாறு மேயா் ஆா்.பிரியா உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள், தூா்வாரும் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மேயா் ஆா்.பிரியா தலைமையிலான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மழைநீா் வடிகால்களைத் தூா்வாருவது, நீா்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரைகளை அகற்றுவது, சுரங்கப் பாதைகளின் தொட்டிகளில் உள்ள வண்டல்களைத் தூா்வாருவது, சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மேயா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
கொசஸ்தலையாறு, கோவளம் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகாலுக்கு உரிய இணைப்புகளை ஏற்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். மழைநீா் விடிகால்களில் நீா் தடையின்றி செல்லும் வகையில் தூா்வார வேண்டும். பழைய சாலைகளை அகழ்ந்தெடுத்து உடனடியாக சாலை அமைக்க வேண்டும்.
எதிா்வரும் நாள்களில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் என்கிற நிலையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மழைநீா் வடிகால் இணைப்பு இல்லாத இடங்களில் செப்டம்பா் மாதத்துக்குள் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். பொறியாளா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக சீா்செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, வட்டாரத் துணை ஆணையா்கள், தலைமைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.