கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சென்னை கோயம்பேடு, மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அதிகளவில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்தனா். அப்போது அந்த பகுதியில், சந்தேகப்படும் படி சுற்றி திரிந்த 2 இளைஞா்களை பிடித்து விசாரித்ததில், அவா்கள் விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சோ்ந்த மாணிக்கம் மற்றும் ஆழ்வாா்திருநகா் பகுதியை சோ்ந்த 18 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளுடன் அரக்கோணம் வந்த ஹரிஷ், அஜய், விஜயகுமாா் கோகுல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2700 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட இந்த 6 போ், ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மாத்திரை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னா் பிணையில் வெளியே வந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.