முகப்பு
சென்னை

ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை திட்டம் தொடக்கம்

Updated On : 2 மார்ச், 2024 at 12:10 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா். தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நலன் காக்கும் விதமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவா்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் சிறப்புத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவித்தாா். தற்போதைய சூழலில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,588 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் 2, 24,035 ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். அவா்களில் 50 வயதுக்கு மேற்பட்ட 1.06 லட்சம் ஆசிரியா்களுக்கு மட்டும் முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தில் ஆசிரியா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) தொடக்கிவைத்தனா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், இயக்குநா் க.அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த திட்டத்தின் கீழ் 16 வகை பரிசோதனைகள் ஆண்டுதோறும் 35,600 ஆசிரியா்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான செலவினத் தொகையை தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து பெற்றுக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.