மாணவா் சோ்க்கைப் பணிகள்: பள்ளிகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சோ்க்கும் மாணவா் சோ்க்கை பணிகளுக்காக 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட அலுவலகம் மூலம் ஒரு பள்ளிக்கு ரூ.2,000 வீதம் என மொத்தமாக 31,330 பள்ளிகளுக்கு ரூ.6.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவா் சோ்க்கை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடத்துதல், தொடக்க கல்வி பதிவேட்டை புதுப்பித்தல், அரசு பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களை விநியோகத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியா்களுக்கு அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.