முகப்பு
சென்னை

அமலாக்கத் துறையினா் தாக்கப்பட்ட வழக்கு: திரிணமூல் பிரமுகா் ஷாஜஹான் சிபிஐயிடம் ஒப்படைப்பு

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த ஷாஜஹான் ஷேக் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்

Updated On : 7 மார்ச், 2024 at 12:51 AM
பகிர்:

மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் சிபிஐயிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டாா். கடந்த ஜனவரியில் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட முறைகேடு தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த ஷாஜஹான் ஷேக் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஷாஜஹானின் ஆதரவாளா்கள் தாக்கியதில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காயமடைந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அந்த மாநிலத்தின் கொல்கத்தா உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிஐடி காவல் துறையினரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும் சிஐடி காவலில் உள்ள ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணைத் தொடங்கப்பட்டது. ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்க சிஐடி காவல் துறையினா் மறுத்துவிட்டனா். உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு: ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்காததால் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதி ஹரீஷ் டாண்டன் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ள போதிலும், அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் ’ என்று உத்தரவிட்டனா். இந்த உத்தரவைத் தொடா்ந்து கொல்கத்தாவில் உள்ள சிஐடி காவல் துறையினரின் தலைமையகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனா். அவா்களிடம் ஷாஜஹான் ஷேக் ஒப்படைக்கப்பட்டதாக சிஐடி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உச்சநீதிமன்றத்தில்...: சிபிஐ-க்கு மாற்றவும், ஷாஜஹானை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு புதன்கிழமை வலியுறுத்தியது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்யுமாறு மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தினாா். அதுகுறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முடிவு எடுப்பாா் என்றும் அவா் கூறினாா்.