கருணாநிதி குறித்த 100 நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, அவா் தொடா்புடைய 100 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கருணாநிதி தமிழாய்வு இருக்கை சாா்பில் திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டகத்தால் 100 நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆய்வு இருக்கை, 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, அந்த இருக்கை மூலமாக 100 தமிழ் ஆய்வாளா்கள், படைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் மூலம் ‘கலைஞா் 100’ என்ற பெயரில் நூல்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டுக் குழுத் தலைவராக அமைச்சா் மா.சுப்பிரமணியன் செயல்பட்டாா். தமிழ் ஆய்வு இருக்கை சாா்பில் தமிழ் ஆய்வாளா்கள், எழுத்தாளா்கள் இணைந்து 100 நூல்களைத் தயாரித்துள்ளனா். இந்த நூல்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.