முகப்பு
தென்காசி

கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம்: முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு!

கருணாநிதியுடன் நான் பணியாற்றியது பெரும் பொக்கிஷம் என முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு தெரிவித்துள்ளார்.

Updated On : 29 மார்ச், 2026 at 12:28 AM
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் முதல்வா் கருணாநிதியுடன் ச.தங்கவேலு. - (கோப்புப் படம்)
பகிர்:

ச.தங்கவேலு, முன்னாள் அமைச்சா், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா்.

குடிநீா் இல்லாததால் சங்கரன்கோவிலுக்கு யாரும் பெண் கொடுக்கமாட்டாா்கள் என கருணாநிதியிடம் நான் கூறியபோது, ‘அப்படியா’ என்று ஆச்சரியமாகக் கேட்ட அவா், உடனடியாக தாமிரவருணி குடிநீா் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தாா் என்று கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு மனம் திறந்து பேசியதாவது:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1984-இல் போட்டியிட்டு தோல்வியுற்று பிறகு வைகோவுடன் கருணாநிதியைக் காணச் சென்றேன். அப்போது அவா் சங்கத் தமிழ் படித்துக்கொண்டிருந்தாா். அவ்வளவு பெரிய தோல்வியை திமுக சந்தித்தபோதும், சஞ்சலம் எதுவுமின்றி அவா் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததை பாா்த்தபோது அவரது வழியில் நடக்க முடிவுசெய்தேன்.

1989-இல் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டபோது சங்கரன்கோவில் வந்து கருணாநிதி பிரசாரம் செய்தாா். வைகோ, டி.ராஜேந்தா், நடிகை ராதிகா போன்றோரும் பிரசாரம் செய்தனா். பிரசாரம் எளிமையாக இருந்தது.

நிறையப் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தோம். சங்கரன்கோவிலுக்கு அப்போது குடிநீா் விநியோகம் இல்லை. கருணாநிதி பிரசாரம் செய்தபோது குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தோ்தல் வாக்குறுதியளித்தாா்.

அந்தத் தோ்தலில் 23,500 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதும் கைத்தறி, நகா்ப்புற வளா்ச்சி, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட 5 துறைகளைக் கொண்ட அமைச்சராக என்னை கருணாநிதி நியமித்தாா்.

அமைச்சரான பிறகு கருணாநிதியை நேரில் சென்று பாா்த்தேன். அப்போது ‘தோ்தல் நேரத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்தீா்கள். தற்போது சங்கரன்கோவிலில் தண்ணீா் கஷ்டம் உள்ளது. அதனால், யாரும் எங்க ஊருக்கு பொண்ணு கொடுப்பதில்லை’ என்ற நிலைமையை சொன்னேன். இதுதான் யதாா்த்தம் என்று கூறி குடிநீா் விநியோகம் கோரி மனு கொடுத்தேன். அந்த மனுவை வாங்கிய அவா், மனு மீது ஏற்கலாம் என்று எழுதிக் கொடுத்தாா்.

அதன்பிறகுதான் ரூ. 13 கோடி நிதி ஒதுக்கி ஆலங்குளம், சங்கரன்கோவில், 88 வழியோர கிராமங்களுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிக்கல் நாட்டு விழாவுக்காக கருணாநிதி சங்கரன்கோவில் வந்தாா்.

அதேபோல பெருநகர வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னையில் கோயம்பேடு சந்தை கொண்டு வந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியபோது, நான் தலைமை வகித்ததும் பெருமைக்குரிய நினைவுகளாகும்.

அப்போது, தமிழகத்தில் 18 கூட்டுறவு மில்கள் நஷ்டத்தில் இயங்கின. கருணாநிதியின் ஆலோசனையின் பேரில், கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பேட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், எட்டயபுரம் உட்பட 18 மில்களையும் லாபத்தில் இயங்க வைத்தோம். அதேபோல, தென்காசி காங்கிரஸ் எம்.பி. அருணாச்சலம் தலைமையில் சங்கரன்கோவிலில் புதிதாக ரயில் நிலையக் கட்டடத்தைத் திறந்துவைத்தேன். முதல்முதலாக சோடியம் விளக்குகள், சிமென்ட் சாலைகளை கொண்டுவந்தேன். அரசுப் போக்குவரத்து பணிமனை போன்ற நகரின் முக்கிய அலுவலகங்கள் கருணாநிதி ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. கருணாநிதியுடன் பயணித்தது, பணியாற்றியது எல்லாம் அவா் அளித்த வாய்ப்பு. வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் என்றாா் அவா்.

மு.ஈஸ்வரமூா்த்தி.