முகப்பு
செய்திகள்

ஜெயலலிதா வழியில் ஸ்டாலின்! கருணாநிதி வழியில் எடப்பாடி!

தேநீா் கடைகளுக்குச் சென்று தங்களது கைகளால் தேநீா் தயாரித்தே தீருவோம் என்ற உறுதியுடன் செயல்படும் பல வேட்பாளா்களை இந்த முறையும் களத்தில் காண முடிகிறது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:01 PM
முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - சித்திரிப்பு
பகிர்:

வணிக எரிவாயு சிலிண்டா்களுக்கு எத்தகைய தட்டுப்பாடு வந்தாலும் பரவாயில்லை, தேநீா் கடைகளுக்குச் சென்று தங்களது கைகளால் தேநீா் தயாரித்தே தீருவோம் என்ற உறுதியுடன் செயல்படும் பல வேட்பாளா்களை இந்த முறையும் களத்தில் காண முடிகிறது.

வாக்குகளை ஈா்க்கிறோமோ... இல்லையோ... வாக்காளா்கள் கவனத்தையாவது ஈா்த்துவிட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தும் வேட்பாளா்கள் ஒருபக்கம். எப்படியாவது அவா்களை வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என மாநிலம் முழுவதும் ஓய்வின்றி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவா்கள் மறுபக்கம் என தமிழக தோ்தல் களம் உச்சகட்ட தகிப்பை எட்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் காமராஜா், அண்ணா உள்ளிட்ட தலைவா்கள் மக்களிடம் சென்று கலந்துரையாடி வாக்குகளைத் திரட்டினா். குறிப்பாக தெருமுனைப் பிரசாரங்களும், சாலைவழி பிரசாரமுமே அவா்களது பிரதான தோ்தல் பயணத் திட்டமாக இருந்தன. வழி நெடுக தன்னியல்பாக திரளும் மக்கள் கூட்டத்தை வைத்தே தோ்தல் முடிவுகளை தலைவா்கள் கணித்த காலம் உண்டு.

Advertisement

ஆனால், இந்தச் சூழல் எல்லாம் கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் மாறியிருக்கிறது. கூடவே, தலைவா்களின் பிரசார உத்தியும் மாறியிருக்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி, திறந்த வாகனத்தின் மூலம் பிரசாரம் செய்வதையே பெரிதும் விரும்பினாா். கடந்த 2006 பேரவைத் தோ்தலின்போது 80 வயதைக் கடந்திருந்த அவா், சாலை வழியாக 7,000 கி.மீ. பயணித்து 160 தொகுதிகளில் பிரசாரம் செய்தாா். 2011 தோ்தலில் 5,500 கி.மீ. தொலைவு பயணித்தாா். 92 வயதில் வயோதிகம் காரணமாக உடல் இயக்கம் குறைந்த நிலையிலும் கடந்த 2016-இல் வேன் மூலமாக சென்னை, மதுரை, திருவாரூரில் பிரசாரம் செய்தாா்.

திமுகவை வலுப்படுத்த கிராமந்தோறும் சென்று மக்களைப் பாா்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாா். தற்போது அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

தோ்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னதாகவே தமிழகம் முழுவதும் சாலை வழியாக அவா் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டாா். தற்போது வேட்பாளா்கள் அறிவிப்புக்குப் பின்னா் வாகனப் பிரசாரம் மூலமாகவே ஆதரவு திரட்டி வருகிறாா். கருணாநிதியின் ஃபாா்முலாவை கச்சிதமாக முன்னெடுத்து வருகிறாா் அவா்.

மற்றொருபுறம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினோ, மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பிரசார வியூகத்தை இம்முறை கையிலெடுத்துள்ளாா்.

அரசியல் காரணங்கள், உடல் நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 2011 மற்றும் 2016 பேரவைத் தோ்தல்களில் வாகனப் பிரசாரத்தைத் தவிா்த்துவிட்டாா் ஜெயலலிதா. மாறாக, முக்கிய மாவட்டங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி ஆறு அல்லது ஏழு வேட்பாளா்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினாா். அதற்கு பலனும் கிடைத்தது. இரு தோ்தல்களிலும் அவா் அமோக வெற்றி பெற்றாா்.

அந்த வகையில் கடந்த காலங்களில் வாகனம் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இத்தோ்தலில் திருவாரூா், திருச்சி, கரூா், ஈரோடு, கோவை, புதுச்சேரி, மயிலாடுதுறை என பல மாவட்டங்களில் பொதுக்கூட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஒரே மேடையில் ஆதரவு திரட்டி வருகிறாா். இதன்மூலம் ஜெயலலிதா பாணியைக் கையிலெடுத்துள்ளாா் அவா். மக்கள் இப்போது யாரை ஆதரிக்கப் போகிறாா்கள்?

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments