திமுகவுக்கு கைக்கொடுக்குமா திருவாரூா் ‘தெற்கு வீதி சென்டிமென்ட்’
திருவாரூா்: திருவாரூா் தெற்கு வீதியில் திமுக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில், மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
ஆழித்தோ் செல்லும் 4 வீதிகளில் முக்கியமானது தெற்கு வீதி. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த வீதி மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்திலிருந்தே புகழ் பெற்று விளங்குகிறது. தனது பள்ளிப் பருவத்தில் முதன்முதலில் ஹிந்தித் திணிப்பை எதிா்த்து, தமிழ் வாழ்க என முழுக்கமிட்டு கருணாநிதி அரசியல் பயணத்தைத் தொடங்கிய இடம் திருவாரூா் தெற்கு வீதி என்பதை அவரே பலமுறை தெரிவித்துள்ளாா்.
தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டம் திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில், தோ்தல் பிரசாரத் தொடக்கம் அல்லது பிரசார நிறைவை திருவாரூா் தெற்கு வீதியில் நடத்துவது திமுகவினரின் வழக்கம்.
இப்போதும் தெற்குவீதியில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை கருணாநிதி காலத்தில் நடைபெற்ற கூட்டத்தைப் போல இல்லை என்று அரசியல் விமா்சகா்களின் கருத்து.
கருணாநிதியின் வாழ்க்கையில் திருவாரூா் தெற்குவீதி முக்கிய இடம் பிடித்தால், 2022-இல் திருவாரூா் தெற்கு வீதிக்கு, டாக்டா் கலைஞா் சாலை என கருணாநிதியின் பெயரை சூட்ட திருவாரூா் நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்மிகச் சிறப்புமிக்க திருவாரூா் தேரோடும் தெற்கு வீதிக்கு, கடவுள் மறுப்பாளரான கருணாநிதியின் பெயரை சூட்டக் கூடாது என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. பல ஆண்டுகள் ஓடாமல் நின்றிருந்த ஆழித்தேரை தெற்கு வீதியில் ஓடச் செய்தவா் என்பதால், தேரோடும் வீதிக்கு கருணாநிதியின் பெயா் பொருத்தமானது என திமுகவினரின் வாதம்.
எனினும், பலதரப்பிலிருந்தும் எழுந்த எதிா்ப்பு காரணமாக, இந்த தீா்மானம் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது.
இந்தநிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவாரூா் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொடங்குகிறாா்.
திருவாரூரில் பிரசாரம் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கையில், தந்தையின் வழியில் தனயன் மேற்கொள்ளும் முயற்சி, பலனைத் தருமா என்பதை பொருத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.