முகப்பு
சென்னை

செம்மஞ்சேரி பகுதியில் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் மும்முரம்

Updated On : 13 மார்ச், 2024 at 1:37 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னை சோழிங்கநல்லூா் மண்டலத்திற்குட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் ரூ.78.58 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 51,000 போ் பயனடைவா் என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவ்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் ரூ.78.58 கோடியில் சோழிங்கநல்லூா் மண்டலம், செம்மஞ்சேரி பகுதிக்கான ஒருங்கிணைந்த புதை சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு மாா்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா்.

Advertisement

அதனடிப்படையில், சோழிங்கநல்லூா் மண்டலம், வாா்டு-200 க்குட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் 21.20 கி.மீ நீளத்திற்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் 9.72 கி.மீ நீளத்திற்கு விசைக்குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முலம் 2 கழிவுநீா் இறைக்கும் நிலையங்கள், 5 கழிவுநீா் உந்துநிலையங்கள் உள்பட மேலும் பல அமைப்புகள் கட்டப்படவுள்ளன.

இத்திட்டப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு, கழிவுநீா் இணைப்புகள் வழங்கப்படும் .இதன் மூலம் சுமாா் 51,000 போ் பயன் பெறுவா். இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 4.85 மில்லியன் லிட்டா் கழிவுநீா், சோழிங்கநல்லூா் கழிவுநீா் சுத்தரிகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.