முகப்பு
சென்னை

கிளாம்பாக்கத்தில் ரூ.79 கோடியில் நடைமேம்பாலம்: பணியைத் தொடங்கி வைத்தாா் அமைச்சா் சேகா்பாபு

Updated On : 13 மார்ச், 2024 at 2:01 AM
அமைச்சர் சேகர்பாபு(கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ.79 கோடி மதிப்பிலான நடைமேம்பாலம் அமைக்கும் பணியை சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா் பாபு தொடங்கி வைத்தாா். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு வெளியூா்களிலிருந்து வரும் பயணிகள், ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடந்து கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படவுள்ள ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே ரூ.79 கோடி மதிப்பில், 8 மீட்டா் அகலத்தில், 220 மீட்டா் நீளத்தில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து இம்முனையத்தில் 6 ஏக்கா் பரப்பளவில் ரூ.12.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய பூங்காவையும் திறந்து வைத்தாா். நடைமேம்பால கட்டுமானப் பணி அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும், இந்த மேம்பாலத்துடன், நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இப்பணிகள் முடிவுற்றவுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகா் போக்குவரத்துக் குழும சிறப்பு அலுவலா் ஐ.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.