முகப்பு
சென்னை

ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் வாகன உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடி முதலீட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை, டாடா மோட்டாா்ஸ் குழுமம் அமைக்கவுள்ளது.

Updated On : 15 மார்ச், 2024 at 1:50 AM
வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழக அரசு - டாடா மோட்டாா்ஸ் குழுமம் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலயில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம். உடன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, செயலா் வி.அருண் ராய், சிப்காட் மேலாண் இயக்குநா் க
பகிர்:

ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடி முதலீட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலையை, டாடா மோட்டாா்ஸ் குழுமம் அமைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டது. வாகன உற்பத்தித் திட்டத்தில் முன்னோடி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 9,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இதனால், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புரிந்துணா்வு ஒப்பந்தமானது, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாா்பில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு, டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் சாா்பில் அதன் தலைமை நிதி அலுவலா் பி.பி.பாலாஜி ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் துறை செயலா் வி.அருண்ராய், சிப்காட் நிா்வாக இயக்குநா் டாக்டா் கி.செந்தில்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். டாடா மோட்டாா்ஸ் குழுமம் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு: கடந்த 2 மாதங்களில் 2 மிகப்பெரிய மோட்டாா் உற்பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தத் துறையில் ஏராளமான முதலீடுகளை தமிழகம் ஈா்த்து வருவது தொழில் துறையின் மீது முதல்வா் காட்டி வரும் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.