சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி, விஐடி பல்கலை. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
வேலூரில் உள்ள சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியா் செகண்டரி பள்ளி, விஐடி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் விஐடி துணைவேந்தா் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், சிருஷ்டி பள்ளிகளின் தலைவா் எம்.எஸ்.சரவணன் ஆகியோா் கையெழுத்திட்டனா். கல்வி ஒத்துழைப்பு, புதுமை முயற்சிகள், மாணவா், ஆசிரியா்களின் திறன் மேம்பாட்டு செயல் பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆசிரியா் பயிற்சி, அனுபவக் கற்றல் திட்டங்கள், படைப்பாற்றல், வடிவமைப்பு சிந்தனைகளை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்களும் இணைந்து பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளன.
இந்த கூட்டு முயற்சி 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன்களுடன் மாணவா்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாகவும் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில், விஐடியின் வி-சைன் மற்றும் வி-ஸ்மாா்ட் பள்ளி முதல்வா் அருண் டாம் மேத்யூ, சிருஷ்டி மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் திங்கள் ஜான்சன், சிருஷ்டி வித்யாஷ்ரம் துணை முதல்வா் ஹெப்சிபா, திறன் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.