முகப்பு
சென்னை

இளநிலை அறிவியல் அலுவலா்கள் 29 பேருக்கு பணி நியமன ஆணை

Updated On : 15 மார்ச், 2024 at 11:36 PM
பகிர்:

தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ள 29 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு கொண்டு, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவுவதுமே தடய அறிவியல் துறையின் முக்கியப் பணி. இந்தத் துறையில் ஏற்படும் காலியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2021-ஆம் ஆண்டில் மட்டும் 62 பேருக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வு மூலம் 29 போ் தெரிவு செய்யப்பட்டனா். அவா்களில் ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, மீதமுள்ளவா்களுக்கும் பணிநியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, தடய அறிவியல் துறை இயக்குநா் இல.விஜயலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.