ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 19% உயா்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 19 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 4,68,410 இரு சக்கர வாகனங்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,94,460-ஆக இருந்தது. 2023 பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த பிப்ரவரியில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,45,257-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 3,82,317-ஆக இருந்தது. அதே போல், கடந்த 2023 பிப்ரவரில் 12,143-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 23,153-ஆக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் மோட்டாா்சைக்கிள்கள், ஸ்கூட்டா்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே நிறுவனம் விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.