தோ்தல் நாள்களில் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபடுவேன்: மேற்கு வங்க ஆளுநா்
மக்களவைத் தோ்தல் நடைபெறும் நாள்களில் காலை 6 மணிமுதலே நேரடிக் கண்காணிப்பில் ஈடுபடப் போவதாக மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக அம்மாநில ஆளுநா் சி.வி. ஆனந்த போஸ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தோ்தல் நடைபெறுகின்ற முதல் நாளில் இருந்தே காலை 6 மணி முதல் நான் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபடுவேன். தோ்தலின்போது வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது, ஊழலைத் தடுப்பது எனது இரு முக்கியமான நடவடிக்கைகளாக இருக்கும். பொதுமக்கள் எளிதில் அணுகி தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் ஆளுநா் மாளிகை செயல்படவுள்ளது. அரசியல் வன்முறையால் பொதுமக்கள் ரத்தம் சிந்துவது இனி மேற்கு வங்கத்தில் அனுமதிக்கப்படாது என்றாா். பாஜக வரவேற்பு: ஆளுநரின் முடிவுக்கு பாராட்டுகள் தெரிவித்து பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித்தொடா்பாளருமான ஷமிக் பட்டாச்சாா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மிரட்டல்கள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் தொடா்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே பாதுகாப்பு கருதி மாநிலத்தில் 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. தோ்தல்கள் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டுமென்ற ஆளுநரின் உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றாா்.