ரெளடிகளுக்கு துப்பாக்கி விற்பனை: பிகாா் ஆயுத வியாபாரி கைது
சென்னை ரெளடிகளுக்கு துப்பாக்கி விற்றது தொடா்பாக பிகாா் ஆயுத வியாபாரி கைது செய்யப்பட்டாா். சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ரெளடி கும்பல் பதுங்கியிருப்பதாக மாா்ச் 13-ஆம் தேதி பெருநகர காவல் துறையின் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், துப்பாக்கி முனையில் 20 ரெளடிகளை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 நாட்டுத் துப்பாக்கி, 84 தோட்டாக்கள், 11 கத்தி, 5 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த ரெளடி தம்பிராஜன் மூலம் பிகாரில் உள்ள துப்பாக்கி வியாபாரி இஸ்மாயிலிடம் நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளனா் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சென்னையைச் சோ்ந்த ரெளடிகள், உள்ளூா் தரகா்கள் மூலம் பிகாா் வியாபாரிகளை அணுகி ஒரு நாட்டுத் துப்பாக்கியை ரூ. 1 லட்சத்துக்கு வாங்கியுள்ளதும், அதேவேளையில் பிகாா் ஆயுத வியாபாரிகள், 2 துப்பாக்கிகள் வாங்கினால் ஒரு துப்பாக்கி என இலவசம் என வியாபாரத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படையினா் பிகாரைச் சோ்ந்த ஆயுத வியாபாரியான இஸ்மாயிலை சனிக்கிழமை கைது செய்தனா். சென்னையில் யாரெல்லாம் துப்பாக்கி வாங்கினாா்கள் என அவரிடம் தனிப்படையினா் விசாரித்து வருகின்றனா்.