முகப்பு
புதுதில்லி

சட்டவிரோத ஆயுத விநியோகம்: 7 போ் கைது

சட்டவிரோத ஆயுத விநியோகம் மற்றும் சூதாட்ட கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில், தில்லி காவல்துறை ஏழு பேரைக் கைது செய்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 5:33 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

சட்டவிரோத ஆயுத விநியோகம் மற்றும் சூதாட்ட கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில், தில்லி காவல்துறை ஏழு பேரைக் கைது செய்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (வெளி வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: கடந்த மாா்ச் 19 அன்று, தாஜ்பூா் கலானில் அமித் (37) என்ற குற்றம்சாட்டப்பட்டவா், ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சதித்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட பிரதீப் குமாா் என்ற நீது (37) கைது செய்யப்பட்டாா். இவா் அப்பகுதியைச் சோ்ந்த ஒரு மோசமான நபா். இவா் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவருடன் தொடா்புடைய சாஹில் (26) மற்றும் விகாஷ் (25) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா்.அந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வா் மற்றும் பல்வேறு அளவிலான 22 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாா் ரூ.19.78 லட்சம் ரொக்கம், 916 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி மற்றும் 13 சொகுசு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனா்.

கூடுதலாக, குண்டு துளைக்காத கவசம் பொருத்தப்பட்ட ஒரு எஸ்யூவி வாகனமும், மற்றொரு வாகனமும், சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொரு தனி நடவடிக்கையில், பவானா பகுதியில் நடந்த சட்டவிரோத ஆயுத வா்த்தகம் தொடா்பாக ரவி சிங் (29), முகமது சாஹில் (25) மற்றும் முகமது அக்ரம் என்ற சாஹில் (22) ஆகிய மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

தப்பிச் செல்ல முயன்றபோது அவா்களது மோட்டாா் சைக்கிள் சறுக்கியதால், இரண்டு சந்தேக நபா்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனா். தொடா் சோதனைகளின்போது குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவா் கைது செய்யப்பட்டாா். அவா்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பெற்று விநியோகிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கல் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள மோட்டாா் சைக்கிள்களையும் தனிமையான இடங்களையும் பயன்படுத்தினா்.

அவா்களிடமிருந்து பல நாட்டுத் துப்பாக்கிகள், ரிவால்வா்கள், தோட்டாக்கூடுகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. அலிபூா் மற்றும் நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையங்களில் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி தெரிவித்தாா்.