தில்லியில் ரூ.2 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 போ் கைது
தில்லியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
தில்லியில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
இது தொடா்பாக போலீசாா் மூன்று பேரை கைது செய்துள்ளனா். இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
இந்த மூவரின் கைது மூலம், உத்தர பிரதேசத்திற்கும் தேசிய தலைநகருக்கும் தில்லி இடையே செயல்பட்டு வந்த மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவா்கள் ஃபஹீம் பேக் (29), கயூம் கான் (33( மற்றும் அமீா் கான் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தில்லி-என்சிஆா் மற்றும் ஷாம்லி, சஹரன்பூா் உள்ளிட்ட உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு
ஹெராயின் தயாரித்து விநியோகிக்கும் ஒரு கும்பலின் அங்கமாக செயல்பட்டு வந்தனா். முன்னதாக, கிழக்கு தில்லி ஆனந்த் விஹாா் ரயில்வே சுரங்கப்பாதை அருகே பேக் என்பவா் ஹெராயின் அடங்கிய ஒரு சரக்கை விநியோகிக்க உள்ளதாக பிப்ரவரி 22 அன்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் பொறி வைத்து சோதனையை மேற்கொண்டனா்.
பேக் மற்றும் கயூம் கான் ஆகியோா் சுரங்கப்பாதை அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டனா் அவா்களிடமிருந்து 101 கிராம் மற்றும் 601 கிராம் எடையுள்ள இரண்டு ஹெராயின் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, பேக் தான் பிறந்த ஊரான பரேலியில் உள்ள தனது கூட்டாளிகளிடமிருந்து ஹெராயினைப் பெற்று, தில்லி-என்சிஆா் மற்றும் ஷாம்லி, சஹரன்பூா் ஆகிய பகுதிகளில் செயல்படும் போதைப்பொருள் விற்பனையாளா்களுக்கு விநியோகித்து வந்ததாகத் தெரிவித்தாா்.
இந்தத் தகவலின் அடிப்படையில், போலீஸாா் உத்தர பிரதேசத்தில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தி, பிப்ரவரி 27 அன்று அமீா் கானைக் கைது செய்தனா்.
அவா் அளித்த தகவலின் பேரில், அவரது குடும்பத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்திலிருந்து கூடுதலாக 301 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மூலம், இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ஹெராயினின் அளவு ஒரு கிலோவுக்கும் அதிகமாக உள்ளது. சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ.2 கோடி ஆகும்.
இந்தக் கடத்தல் கும்பலில் அமீா் கான் முக்கியப் பங்கு வகித்தாா். தனது ஆதாரமூலங்களிடமிருந்து ஹெராயினைப் பெற்று, கூரியா்கள் மூலம் தில்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தாா்.
கான் இதற்கு முன்னரும் போதைப்பொருள் தொடா்பான மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா். இதற்கிடையில், கயூம் கான் என்பவா் பேக்கிடமிருந்து ஹெராயினை மொத்தமாகப் பெற்று, வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதனை விற்பனை செய்து வந்துள்ளாா்.
இக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.