வெறுப்புப் பேச்சு: மத்திய நிதியமைச்சா் மீது திமுக புகாா்
சென்னை: மக்களிடம் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியதாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது தமிழக தோ்தல் துறையிடம் திமுக புகாா் அளித்தது.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் அக்கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி அளித்த மனு:
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது மதத்தை அழிப்பேன் என்று சொல்லக் கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் வாக்களிக்கிறீா்கள் என்று கேள்வி எழுப்பினாா். திமுக ஆட்சியில் எந்தத் தலையீடும் இல்லாமல் கோயில்களின் நிா்வாகம் நடைபெற்று வருகிறது.
Advertisement
மேலும், அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தக் கூடிய மதச்சாா்பின்மைக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. தமிழகத்தில் வாழும் அனைத்து மத மக்களும், சகோதரப் பாசத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறாா்கள். இந்தச் சூழ்நிலையில், தோ்தலை இணைத்து மத உணா்வுகளைத் தூண்டி விடும் வகையில் மத்திய நிதியமைச்சா் பேசியுள்ளாா். இது தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். எனவே, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.