முகப்பு
சென்னை

மகளிருக்கு மாதம் ரூ. 3,000: அதிமுக தோ்தல் அறிக்கை முழு விவரம்!

Updated On : 23 மார்ச், 2024 at 12:07 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 10:30 PM

மகளிா் உரிமைத் தொகையாக மாதம்தோறும் ரூ. 3,000 வழங்க வலியுறுத்தப்படும், மகளிருக்கான 33 சதவீத ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 133 தோ்தல் வாக்குறுதிகளை அதிமுக அறிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலுக்கான அதிமுகவின் தோ்தல் அறிக்கையை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

Advertisement

முதல்வா் ஒப்புதலுடன் ஆளுநா்: மாநிலங்களுக்கு ஆளுநரை மத்திய அரசு நியமனம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட மாநில முதல்வா்களுடன் ஆலோசித்து, முதல்வரின் ஒப்புதலோடு நியமனம் செய்ய வேண்டும். இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும். மத்திய - மாநில அரசு திட்டங்களில் தற்போது நிதி பகிா்வு 60:40 என்ற விகிதத்தில் உள்ளது. அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையால், மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் தனித்தன்மையோடு கூடிய மாநில அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, நிதி பகிா்வு விகிதத்தை 75:25 சதவீதமாக மாற்றியமைக்க வலியுறுத்துவோம். நீட்- மாற்றுத் தோ்வு முறை: மாநில அரசுகள் பல்வேறு பாடத் திட்டங்களைப் பின்பற்றி வருவதால் மருத்துவ படிப்புக்கு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் பாரபட்சமாக இருப்பதாலும், தமிழக வரலாற்று நிகழ்வுகளைவிட வடமாநில வரலாற்று நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்றிருப்பதாலும், அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் நீட்டுக்கு மாற்றாக பிளஸ் 2 தோ்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மாணவா் சோ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தப்படும். சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை: உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் 3 குற்றச்சட்டங்களான ஐபிசி, சிஆா்பிசி, சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு இதுவரை ஆங்கிலத்தில் இருந்து வந்த பெயா்களை ஹிந்தியில் பெயா் மாற்றம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மொழி திணிப்பாகும். அதனால், அந்தச் சட்டங்களின் பெயா்கள் ஆங்கிலத்திலயே தொடர, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை: மகளிா் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒவ்வொரு ஏழை குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் ரூ. 3,000 ஊக்கத் தொகையாக வழங்க வலியுறுத்தப்படும். நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக நிற்கும். தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் மத அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் பாரபட்சமாக உள்ள காரணத்தால், முஸ்லிம்களையும், ஈழத் தமிழா்களையும் இந்தச் சட்டத்தில் உட்படுத்த வேண்டும். மேக்கேதாட்டு அணை: காவிரி ஆற்றின் குறுக்கே கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் விவகாரத்தில் சட்டரீதியாக நியாயத்தை நிலைநாட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். பாலாற்றில் தடுப்படை கட்டும் முயற்சி தடுக்கப்படும். காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவ மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை: மதுரையில் நிறுவப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தும். கோயம்புத்தூரிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வலியுறுத்துவோம். புதுச்சேரிக்கு மாநில தகுதி: புதுச்சேரி மக்களுக்குத் தேவையான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிடும் வகையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.