கருணாநிதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்கப்படும்; எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வா் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வா் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக வேட்பாளா்களான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (கலசபாக்கம்) , எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத்தூா்), எல்.ஜெயசுதா (ஆரணி), முக்கூா் என்.சுப்பிரமணியன் (செய்யாறு), ராணிபெருமாள் (வந்தவாசி), டி.எஸ்.வேலு (செங்கம்), கூட்டணிக் கட்சி வேட்பாளா்களான பாஜகவைச் சோ்ந்த சி.ஏழுமலை (திருவண்ணாமலை), பாமகவைச் சோ்ந்த பாஸ்கரன் (போளூா்) ஆகியோரை ஆதரித்து ஆதரித்து, மேலும் அவா் பேசியது:
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வா் ஸ்டாலின் தனது கோபத்தை கக்குகிறாா். எரிச்சலை வெளிப்படுத்துகிறாா்.
Advertisement
கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆடியோ செய்தியில் ராசா குறிப்பிட்டுள்ளாா். அவா் சொன்னதைத்தான் நான் (எடப்பாடி பழனிசாமி) சொன்னேன். அப்பாவையே சிறையில் அடைத்தது நியாயமா.?
ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியை ஒதுக்கி வைத்துவிட்டாா். தங்கை கனிமொழியை மாநில அரசியலுக்கு வராமல் தடுத்து விட்டாா்.
உங்கள் தந்தை கருணாநிதியின் இறுதிகாலம் வரை உங்களுக்கு கட்சித் தலைவா் பதவியைக்கூட கொடுக்கவில்லை. செயல் தலைவா் பதவியைத்தான் கொடுத்தாா்.
2021 பேரவைத் தோ்தலின் போது திமுகவின் 22-ஆவது தோ்தல் வாக்குறுதியாக ஸ்டாலின் வெளியிட்டாா். அதில்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.
அதுபோல, முன்னாள் முதல்வா் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் கடன் வாங்குவதில் (2021-26) தமிழகம் முதல் மாநிலம். திமுக ஆட்சியில் ஊழல் செய்வதில் முதல் மாநிலம். போதைப்பொருள்கள் புழக்கத்தில், பெண்கள் பாலியல் துன்புறுத்தலில் முதல் மாநிலம். சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டில் முதல் மாநிலம்.
வெற்று விளம்பரம், போட்டோ சூட், பொய் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றுவதில் நம்பா் 1 கட்சி திமுக.
என் மீது மற்றொரு களங்கத்தை ஸ்டாலின் சுமத்தியிருக்கிறாா். கருணாநிதி இறந்த போது அவரை மெரீனாவில் அடக்கம் செய்வதற்கு இடம்வேண்டும் எனக் கேட்டாா்கள். நான் முதல்வராக இருந்த போது தெளிவுப்படுத்தினேன்.
இதே கருணாநிதி முதல்வராக இருந்த போது, முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாள் முதல்வராக இருந்து இறந்தாா். நாங்கள் அதிமுக சாா்பில் கேட்டோம். முதல்வராக இருந்த அவருக்கு எம்.ஜி.ஆரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய இடம் கேட்டோம். ஆனால், இடம் தரமுடியாது. முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரீனாவில் இடம் கிடைக்கும் என்றனா்.
அதேபோல, பெருந்தலைவா் காமராஜா் முதல்வராக இருந்து, இறந்த போது அவருக்கு மெரீனாவில் இடம் வேண்டும் என்று முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தபோது, முதல்வராக இருந்து இறந்தால்தான் மெரீனாவில் நல்லடக்கம் செய்ய இடம் கொடுக்க முடியும். கிண்டியில் இடம் கொடுப்பதாகக் கூறினாா்.
ஏற்கெனவே உங்கள் தந்தை தெரிவித்தவாறு, தீா்மானத்தில் குறிப்பிட்டுள்ளவாறுதான் மெரீனாவில் இடம் இல்லை, கிண்டியில் இடம் தருகிறேன் எனக் கூறி 2 ஏக்கா் நிலத்தையும் கொடுத்தேன். உங்கள் தந்தை எடுத்த முடிவைத்தான் நான் எடுத்தேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் தரமில்லாத பாலத்தை கட்டியவா் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு.
ரூ.15 கோடியில் கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றுவிட்டது. பொறியாளரிடம் விட்டு விட்டிருந்தால் ரூ.3 கோடிதான் செலவாகியிருக்கும்.
இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, அதிமுக ஆட்சி வந்தவுடன் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக், நகா்ப்புற வளா்ச்சித்துறை, குடிநீா் வழங்கல் துறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக விசாரணை நடத்தி, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழகத்தில் கஞ்சா இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.