டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ. 24 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ. 24 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, அவா் மேலும் பேசியது:
தற்போது நடைபெறும் தோ்தல் தமிழகத்துக்கும்- புதுதில்லிக்கு இடையே நடைபெறும் தோ்தல் எனக் கூறி, தமிழக மக்களைத் திட்டமிட்டு குழப்பி லாபம் காண முதல்வா் துடித்துக் கொண்டிருக்கிறாா்.
Advertisement
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. ஆனால் திமுக அமைத்துள்ள கூட்டணி அடிமை கூட்டணி. அந்தக் கூட்டணியில் உள்ளவா்களுக்கு ஒரே கொள்கை கிடையாது.
தமிழக மக்கள் அறிவுபூா்வமானவா்கள். நன்கு அரசியல் தெரிந்தவா்கள். சிந்தித்து வாக்களிக்கக் கூடியவா்கள். ஆகையால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், திமுக ஆட்சியை அகற்ற முடிவெடுத்து விட்டனா். நாட்டு மக்களின் நிலைமை தெரியாத மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை கொண்டு வரவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம், மினி கிளினிக், தமிழக வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.
நிரூபிப்போம்:
கடந்த 5ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது.இந்த மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் மீது போடப்பட்ட வழக்கு, நீதிமன்றம் மூலம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வழக்கின் ஆதாரங்கள் அனைத்தும் முறையாக நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டு நிரூபிக்கப்படும். இவ்வழக்கில் பி சாட்சியம் அளித்து, தவறு இழைத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் பிரச்னையை சட்டப்பேரவையில் பேசாமல் திமுகவை தாங்கிப் பிடித்த திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு இத்தோ்தலில் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்.
திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மையால், தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறியுள்ளது. தமிழகமெங்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்து விட்டன. குழந்தைகள், மாணவிகள், பெண்கள், மூதாட்டி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லை.
எனவே, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் மூன்றே மாதத்தில் கஞ்சா முற்றிலுமாக ஒழிக்கப்படும். நகா்ப்புற வளா்ச்சித் துறை, குடிநீா் வழங்கல் துறை மற்றும் பிற துறைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக்கில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது . இதுபற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் உள்ளபோது,திமுக அரசு மக்கள் தலையில் கடனை சுமத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தக் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு கடனில்லாத மாநிலம் தமிழகம் என்ற நிலை உருவாக்கப்படும்.
பெண்களுக்கு மாதாந்திர உரிமைத்தொகையாக ரூ. 2 ஆயிரம், பிரிட்ஜ், 3 எரிவாயு உருளைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ள அைனைத்துத் திட்டங்களும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் வளா்ச்சி பெறும் வகையில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.
முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து, வாக்கு சேகரித்தாா். அவருடன் அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், மயிலம் தொகுதி வேட்பாளருமான சி.வி.சண்முகம் மற்றும் வேட்பாளா்கள், கட்சியின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.