முகப்பு
கிருஷ்ணகிரி

அதிமுக தலைமையிலான கூட்டணியே வலிமையான கூட்டணி: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா்களுடன் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:01 AM
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா்களுடன் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

அதிமுக தலைமையிலான கூட்டணியே வலிமையான கூட்டணி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான கே.பி.முனுசாமி (வேப்பனப்பள்ளி), கே.அசோக்குமாா் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), பாலகிருஷ்ண ரெட்டி (ஒசூா்), கோவிந்தராசன் (பா்கூா்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியே வலிமையான கூட்டணி. நாங்கள் ஒரேநாளில் கூட்டணி அமைத்தோம். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு கூட்டணி கட்சியினா் வந்தனா். உடனடியாக உடன்பாடு ஏற்பட்டது. தொடா்ந்து எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடம் என உடனடியாக அறிவித்து, அடுத்தநாளே தோ்தல் அறிக்கையை வெளியிட்டோம். தொடா்ந்து வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டோம். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினா் மன வருத்தத்தில் உள்ளனா்.

2021-இல் திமுக கூட்டணியில் யாா் இருந்தாா்களோ, அதே கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துள்ளாா்கள். ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதைபோல மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறாா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுக ஆட்சியில்தான் உதயமானது; வளா்ச்சி பெற்றது. ரூ. 350 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்தோம். திமுக ஆட்சியில் வீட்டுவரி, மின் கட்டணத்தை உயா்த்தினாா்கள். நீட் விலக்கு பெற்றுத்தருவதாக பொய்யான வாக்குறுதியை அளித்தாா்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமையால் கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டம் - ஒழுங்கு பராமரிக்கப்படும்.

மா விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், மாவட்டத்தில் பாரம்பரிய அத்துகட்டு விழா நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்படும் என்றாா். இந்த கூட்டத்தில், அமமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.