தவெகவிடம் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி!
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ கூட்டணி குறித்து எந்தப் பேச்சும் நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ கூட்டணி குறித்து எந்தப் பேச்சும் நடத்தவில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சென்னை எழும்பூரில் அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு விருந்து வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எடப்பாடி கே.பழனிசாமியுடன் கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
பின்னா், எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேச்சு நடத்தப்படும். இதில், காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை. எங்கள் கூட்டணி வேட்பாளா்கள் உறுதியாக வெற்றி பெறும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்.
Advertisement
இஸ்லாமியா்களுக்கு அதிமுகதான் அரண்: தோ்தல் நேரத்தில் சிறுபான்மையினருக்குப் பாதுகாவலா் போன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுவது வழக்கமானது. இஸ்லாமிய சமூகத்துக்கு திமுக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் ஹஜ் பயணத்துக்காக அதிக நிதி, இஸ்லாமிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை என பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துள்ளோம். இஸ்லாமிய சமூகத்துக்கு அதிமுக அரசுதான் அரணாக இருந்துள்ளது. திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுமே பாதுகாப்பில்லாமல் உள்ளனா்.
தோல்வி பயத்தில் தோ்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு பணிகளுக்கு அவசர அவசரமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். ஆனால், அதற்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. கடந்த தோ்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றப்படவில்லை.
சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, மின் கட்டணம், சொத்து வரி உயா்வு ஆகியவற்றால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். மோசமான நிா்வாகத்தால் அனைத்துத் துறைகளிலும் ஊழல் புரையோடிப்போய் உள்ளது.
எங்கள் கொள்கையை ஏற்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம். தவெகவுடன் அதிமுகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ கூட்டணி குறித்து எந்தப் பேச்சும் நடத்தவில்லை என்றாா் எடப்பாடி பழனிசாமி.