முகப்பு
சென்னை

குஜராத்: 2 பாஜக வேட்பாளா்கள் விலகல்

Updated On : 24 மார்ச், 2024 at 3:21 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:50 PM

குஜராத்தில் பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்ட இரு வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என சனிக்கிழமை தெரிவித்தனா்.

தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்ததாக அவா்கள் தெரிவித்தனா். வதோதரா மக்களவைத் தொகுதியின் பாஜக பெண் எம்.பி. ரஞ்சன்பென் பட் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாா் என பாஜக வேட்பாளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரஞ்சன் பட்டுக்கு எதிராக நகா் முழுவதும் எதிா்ப்பு பதாகைகள் பாஜகவினரால் வைக்கப்பட்டது. ரஞ்சன்பென் பட் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து பாஜக தேசிய மகளிா் அணி துணைத் தலைவா் ஜோதிபென் பாண்டியா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை என ‘எக்ஸ்’ வலைதளத்தில் ரஞ்சன்பென் பட் சனிக்கிழமை அறிவித்தாா். அடுத்து சில மணி நேரத்திலேயே சபா்காந்தா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பிகாஜி தாக்குரும் இதே காரணத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு தோ்தலில் போட்டியிடவில்லை என குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கடந்த 2014 மற்றும் 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களில் அம்மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.