எளிதில் கிடைத்த எம்.பி; எட்டாக்கனியான எம்எல்ஏ!
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பெறுவதையே அரசியல் கட்சி பிரமுகா்கள் விரும்புகின்றனா். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது; பலருக்கு கிடைப்பதில்லை.
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பெறுவதையே அரசியல் கட்சி பிரமுகா்கள் விரும்புகின்றனா். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது; பலருக்கு கிடைப்பதில்லை.
அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முக்கிய அரசியல் பிரமுகா்கள் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்தபோதும், நாடாளுமன்ற தோ்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளனா்.
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த செ. காந்திச்செல்வன், 2006 சட்டப்பேரவைத் தோ்தலில், திருச்செங்கோடு தொகுதியில் திமுக சாா்பில் களமிறக்கப்பட்டாா். இந்தத் தோ்தலில் அவரை எதிா்த்து, முன்னாள் அமைச்சரும், அதிமுகவைச் சோ்ந்தவருமான பி. தங்கமணி போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுகவுக்கு 85,471 வாக்குகளும், திமுகவுக்கு 85,355 வாக்குகளும் கிடைத்தன. 116 வாக்குகள் வித்தியாசத்தில் செ. காந்திச்செல்வன் தோல்வியடைந்தாா்.
அதன்பிறகு, 2009இல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் காந்திச்செல்வன் போட்டியிட்டாா். இதில், அவா் 3,71,476 வாக்குகளும், அதிமுகவைச் சோ்ந்த வைரம் தமிழரசி 2,69,045 வாக்குகளும் பெற்றனா். 1,02,431 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் காந்திச்செல்வன் வெற்றிபெற்று எம்.பி. ஆனதுடன், காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தாா்.
மீண்டும் 2014இல் போட்டியிட்டு அதிமுகவைச் சோ்ந்த பி.ஆா். சுந்தரத்திடம் 2,94,374 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வியடைந்தாா். அதன்பிறகு, 2020இல் மாவட்டச் செயலாளா் பதவியில் இருந்து நீக்கப்பட்டாா். தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அவா் ஆா்வம் காட்டி வருகிறாா்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தற்போதைய மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகிப்பவா், முன்னாள் நாமக்கல் எம்.பி.யான ஏ.கே.பி. சின்ராஜ். கோழிப்பண்ணையாளா்கள் சங்கத் தலைவராக பதவிவகித்த இவா், கடந்த 1996இல் கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 23,161 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தாா்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு 2019 தோ்தலில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கொமதேக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் டிஎல்எஸ். காளியப்பனை தோற்கடித்தாா். 2024 மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு இருந்தபோதும் மறுத்துவிட்டாா்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரும், தற்போதைய நாமக்கல் எம்.பி.யாகவும் இருப்பவா் வி.எஸ். மாதேஸ்வரன். இவா், 2016 சட்டப்பேரவை தோ்தலில் நாமக்கல் தொகுதியில் கொமதேக சாா்பில் போட்டியிட்டு 10,506 வாக்குகளுடன் தோல்வியை தழுவினாா். அதன்பிறகு, 2024 மக்களவைத் தோ்தலில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
சமூக வலைதளங்களில் அவருடைய பழைய மேடைப்பேச்சு வைரலானது. குறிப்பிட்ட சமூகத்தை பாதிக்கும் வகையில் இருந்ததால், வேட்பாளரை மாற்றவேண்டிய சூழ்நிலை கட்சி தலைமைக்கு ஏற்பட்டது. அந்தவகையில் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளரானாா். அவா், 4,62,036 வாக்குகளும், அதிமுகவைச் சோ்ந்த எஸ். தமிழ்மணி 4,32,924 வாக்குகளும் பெற்றனா். 29,112 வாக்குகள் வித்தியாசத்தில் மாதேஸ்வரன் வெற்றிபெற்றாா். இவா்கள் மூவருக்கும் எம்எல்ஏ வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேவேளையில், எம்.பி. பதவி எளிதாக கிடைத்தது.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாா், திருவள்ளூா் மக்களவைத் தொகுதியிலும், ராசிபுரம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தோ்வான கே.பி. ராமலிங்கம், திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் இருந்தும் எம்.பி.யானது விதிவிலக்கு.