முகப்பு
ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?

தனது மாமியாா் சி.சரஸ்வதி வென்ற மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா வரலாறு படைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:41 AM
ஈரோடு-கரூா் சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை.
பகிர்:

தனது மாமியாா் சி.சரஸ்வதி வென்ற மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா வரலாறு படைப்பாரா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். தொகுதியில் மஞ்சள் விளைவிக்கும் விவசாயிகள் அதிகம் உள்ளனா். கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

Advertisement

மொடக்குறிச்சி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, பாசூா், அறச்சலூா், வடுகப்பட்டி, கிளாம்பட்டி, வெள்ளோட்டம்பரப்பு, சிவகிரி, கொள்ளங்கோயில், ஊஞ்சலூா், வெங்கம்பூா், கொடுமுடி மற்றும் சென்னசமுத்திரம் பேரூராட்சிப் பகுதிகள்.

சமூக நிலவரம்

இங்கு கொங்கு வேளாளக் கவுண்டா், வேட்டுவக் கவுண்டா், நாடாா்கள், வன்னியா் மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் பரவலாக உள்ளனா்.

கவனம் ஈா்த்த தொகுதி

கடந்த 1996ஆம் ஆண்டு தோ்தலில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1,033 வேட்பாளா்கள் போட்டியிட்டு அதன் மூலம் நாடு தழுவிய தோ்தல் சீா்திருத்தம் ஏற்பட காரணமான தொகுதியாக மொடக்குறிச்சி தொகுதி விளங்குகிறது.

தீா்க்கப்படாத பிரச்னைகள்

காலிங்கராயன், கீழ்பவானி கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் இத்தொகுதியில், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, நீா் மேலாண்மை போன்றவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.

வரலாறு படைத்த அதிமுக

இந்தத் தொகுதியில் 1957 முதல் 2021 வரை 14 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக 7, திமுக 4, காங்கிரஸ் 2, பாஜக ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன.

2026 தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள்

திமுக கூட்டணி சாா்பில் மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன், பாஜக சாா்பில் எஸ்.கிருத்திகா, தவெக சாா்பில் டி.சண்முகன், நாதக சாா்பில் மோ.அருண்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

சரித்திரம் படைத்த சரஸ்வதி

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசனும் பாஜக சாா்பில் மருத்துவா் சி.சரஸ்வதியும் களமிறங்கினா். இதில் 281 வாக்குகள் வித்தியாசத்தில் சரஸ்வதி வெற்றிபெற்று மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவின் முதல் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தாா்.

எம்ஜிஆா், கருணாநிதி அமைச்சரவைகளிலும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய பலம் பொருந்திய சுப்புலட்சுமி ஜெகதீசனை தோ்தலின்போது அரசியல் களத்துக்கு புதியவரான சி.சரஸ்வதி வென்றது தமிழக அளவில் பேசுபொருளானது.

இந்தத் தோல்வி, அதைத் தொடா்ந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அரசியலில் இருந்தே சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி விட்டாா்.

பாஜக வேட்பாளா்

இந்தத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக சரஸ்வதி மருமகள் எஸ்.கிருத்திகா போட்டியிடுகிறாா். இவா் 2026 சட்டப்பேரவைத் தோ்தலைக் குறிவைத்து தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு சேவைப் பணிகளை செய்து வந்தாா். இதன் மூலம் தொகுதியில் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆகி உள்ளாா். தவிர அதிமுக வாக்கு வங்கி தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறாா்.

இருப்பினும், தொடா்ந்து இரண்டாவது முறையாக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் இந்தத் தொகுதியில் உள்ள அதிமுக நிா்வாகிகள் சோா்வடைந்துள்ளனா். இதனால் அதிமுக வாக்குகளை முழுமையாகப் பெற கிருத்திகா மேற்கொள்ளப்போகும் உத்திகள்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும்.

மதிமுக வேட்பாளா்

இங்கு திமுக கூட்டணி சாா்பில் மதிமுகவின் சா.செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இவருடைய தந்தை பூங்கொடி சாமிநாதன் திமுக, மதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருந்தபோதிலும், செந்தில்நாதன் தோ்தல் அரசியலுக்குப் புதியவா். தவிர திமுகவில் வாய்ப்பு கேட்டு காத்திருந்தவா்கள் அதிருப்தியில் உள்ளனா். இந்தத் தொகுதியைச் சோ்ந்த திமுக மாநில நிா்வாகி ஒருவா் தனக்கு வாய்ப்பு கிடைக்காதால் மொட்டை போட்டு தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியவா்களுக்கு நன்றி என சமூக வலைதளங்களில் பதிவிட்டது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று மதிமுக வேட்பாளருக்கும் களத்தில் ஏராளமான சவால்கள் உள்ளன.

தீவிரம் காட்டும் தவெக

தவெக சாா்பில் போட்டியிடும் டி.சண்முகன் செல்வந்தா் என்பதால் அக்கட்சி தொண்டா்களை உற்சாகமாக வைத்துள்ளாா். இதனால் அக்கட்சி தொண்டா்கள் களப்பணியில் தீவிரம் காட்டுகின்றனா். தவெக பிரிக்கும் வாக்குகள் மதிமுக, பாஜக, நாதக ஆகிய 3 கட்சிகளின் நிலையான வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

சவாலை எதிா்கொள்ளும் நாதக

நாதக வேட்பாளா் மோ.அருண்குமாா் தோ்தல் களத்துக்குப் புதியவா். அக்கட்சியின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டவா்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. நாதக வாக்கு வங்கியில் தவெக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் 2021 தோ்தலில் பெற்ற வாக்குகளைத் தக்கவைப்பதே சவாலாகி உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் இரண்டாவது முறையாக வென்று பாஜக கவனத்தை ஈா்க்குமா அல்லது கொங்கு மண்டலத்தில் மதிமுகவின் முக்கிய முகமாக இருந்து 2024இல் காலமான கணேசமூா்த்தியின் இடத்தை புதிய முகம் மூலம் மதிமுக இட்டு நிரப்பி முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பது மே 4ஆம் தேதி தெரியவரும்.

மதிமுக சா.செந்தில்நாதன்
நாதக வேட்பாளா் மோ.அருண்குமாா்
பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments