முகப்பு
சென்னை

பாஜகவுடன் பாமக கூட்டணி: காங்கிரஸ் விமா்சனம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் சமூகநீதிக்கு எதிராக பாமக சென்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்தாா்.

Updated On : 29 மார்ச், 2024 at 1:15 AM
பகிர்:
Updated On : 28 மார்ச், 2024 at 10:05 PM

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் சமூகநீதிக்கு எதிராக பாமக சென்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்தாா். அவா் சென்னை சத்தியமூா்த்தி பவனில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பாஜகவில் சமூகநீதி இல்லை. தமிழகத்தைச் சோ்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரைத் தோ்தலில் போட்டியிட வைக்கின்றனா்., அதே தமிழகத்தைச் சோ்ந்த நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மாநிலங்களவையில் இடம் கொடுக்கின்றனா். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்படும், மருத்துவக்காப்பீடு அளிக்கப்படும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பாஜக மறுக்கிறது. ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, சமூகநீதியைப் பேசி வந்த பாமக, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் சமூகநீதிக்கு எதிராக பாமக சென்றுள்ளது. திருநாவுக்கரசருக்கு பதவி?: தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, தொகுதிகள் மாறுவது தவிா்க்க முடியாதது. அந்த வகையில் காங்கிரஸிடம் இருந்த திருச்சி தொகுதி மாற்றப்பட்டது. அதனால், திருநாவுக்கரசருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரம் கட்சியில் அவருக்கு பெரிய பதவி கொடுக்கப்படும் என்றாா் அவா்.