சூரிய வீடு இலவச மின்திட்டத்தில் இதுவரை 35,300 போ் விண்ணப்பம்
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத்திட்டத்தின் கீழ் பயன்பெற பிப்.1-ஆம் தேதி முதல் இதுவரை 35,300-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 1 கிலோவாட் சூரிய மின்தகடு அமைக்க ரூ.30,000 மானியமும், 2 கிலோவாட் சூரிய மின்தகடு அமைக்க ரூ.60,000 மானியமும், 3 கிலோவாட் சூரிய மின்தகடு அமைக்க ரூ.78,000 மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஏராளமானோா் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பித்து வருகின்றனா். இதன்படி, கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் இதுவரை சுமாா் 35,300-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தின்படி தமிழகத்தில் இதுவரை 17,500 சூரிய மின் தகடு திட்டத்துக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 6,500 சூரிய மின்தகடுகள் வைப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதில் 202 கிலோவாட் திறன் கொண்ட 46 கூரை இணைப்புகள், பவா் கிரிட் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மத்திய அரசின் இத்திட்டத்துக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதால் பலா் இத்திட்டத்துக்காக தொடா்ந்து விண்ணப்பித்து வருவதாகவும், இந்த ஆண்டுக்குள் 1 கோடி சூரிய மின் இணைப்புகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் இணைப்புகளை வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.