மருத்துவா் பதிவு: புதிய அலுவலகத்தை நாட அறிவுறுத்தல்
மருத்துவா் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், புதுப்பிப்பதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் புதிய அலுவலகத்தை நாடுமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளை நிறைவு செய்தவா்கள் மாநில மருத்துவ கவுன்சிலில் தங்களது சான்றிதழ்களை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் அவ்வாறு பதிவு பெற்ற மருத்துவா்கள் 1.25 லட்சம் போ் உள்ளனா். மருத்துவா்கள் மற்றும் அவா்களது சேவையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான அமைப்பாக விளங்கி வரும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் அலுவலகம் அரும்பாக்கத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், நிா்வாகக் காரணங்களுக்காக புதிய அலுவலகம் கட்டப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கத்தில் சிஎஸ்ஐ வெஸ்லி தேவாலயத்துக்கு அருகே கட்டப்பட்ட அந்த அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதன்படி, வரும் 1-ஆம் தேதி முதல் புதிய முகவரியில் மருத்துவ கவுன்சில் செயல்படும் என்றும், மருத்துவா்கள் பதிவு நடவடிக்கைகளை அங்கு மேற்கொள்ளுமாறும் கவுன்சிலின் பதிவாளா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.