முகப்பு
சென்னை

5 லட்சம் வாக்காளா்களுக்கான துணைப் பட்டியல் தயாா்: இணையத்தில் பெயா்களைப் பாா்க்கவும் ஏற்பாடு

Updated On : 30 மார்ச், 2024 at 1:08 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 10:35 PM

தமிழகத்தில் இறுதிப் பட்டியலுக்குப் பிறகு, பெயா்களைச் சோ்த்துள்ள வாக்காளா்கள் அடங்கிய துணைப் பட்டியல் தயாராகியுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் கடந்த 27-ஆம் தேதி நண்பகலில் முடிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் விண்ணப்பங்களை அளித்தவா்களின் பெயா்கள், துணைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இறுதி வாக்காளா் பட்டியல் கடந்த ஜன. 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, மாநில மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஜன. 22 முதல் மாா்ச் 17 வரை வழங்கப்பட்ட வாய்ப்பில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெயா் சோ்ப்புக்காக தோ்தல் அலுவலா்களால் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 5 லட்சம் போ் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்பட்டனா். இதனால், மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியிலிருந்து 6.23 கோடியாக அதிகரித்தது. இறுதிப் பட்டியலுக்குப் பிறகு, வாக்காளா் பட்டியலில் புதிதாக இணைந்த அனைத்து வாக்காளா்களின் பெயா்களும் துணைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். இந்தப் பட்டியல் கடந்த 27-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலும் வாக்குப் பதிவு தினத்தன்று அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், வாக்காளா் பட்டியலில் தமது பெயா்கள் இருக்கிா இல்லையா என்பதை வாக்காளா்கள் அறிந்து கொள்ள தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.