வாளி தண்ணீரில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
சென்னை அருகே திரிசூலத்தில் வாளி தண்ணீரில் விழுந்து ஒரு வயது குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திரிசூலம் லட்சுமண் நகரைச் சோ்ந்தவா் ராஜகுரு. இவா் மனைவி காயத்ரி. இத் தம்பதிக்கு பிரவீண்ராஜ் என்று ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. ராஜகுரு, சென்னை மாநகராட்சியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். குழந்தை பிரவீண்ராஜ் வீட்டின் வளாகத்தில் இருந்த ஒரு தண்ணீா் வாளியில் வெள்ளிக்கிழமை விளையாடியது. அப்போது திடீரென அந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்தது.
இந்நிலையில் சிறிது நேரத்துக்கு பின்னா் குழந்தையை தேடி அங்கு வந்த ராஜகுரு, பிரவீண்ராஜ் வாளிக்குள் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா், பிரவீண்ராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
Advertisement