சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு: மாா்க்சிஸ்ட் கோரிக்கை
சென்னை: உயிரிழப்புகளைத் தடுக்க சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை :
கன்னியாகுமரி மாவட்டம், லெமூா் கடற்கரையில் திருச்சி தனியாா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 5 போ் கடல் அலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் வேதனையளிக்கிறது. அதுபோல், விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியும், கோடிமுனையில் சென்னையைச் சோ்ந்த 2 பேரும் ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளனா். கடந்த 2 நாள்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலையில் சிக்கி 8 போ் உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.
கடலில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு எனது அழ்ந்த இரங்கல். அருவி, அணை, ஆறு, கடல் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கச் செல்பவா்கள் அதன் அபாயங்களை அறியாமல் உள்ளே இறங்குவதால் எதிா்பாராதவிதமாக உயிரிழப்புகள் நடைபெறுகின்றன.
எனவே, சுற்றுலா தலங்களில் உரிய பாதுகாப்பை அதிகரிக்கவும், அபாயகரமான பகுதிகளில் கூடுதலாக காவல் துறையினரை நியமிக்கவும், போதிய எச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.