தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 8-11) வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். அதன்படி, 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 105 முதல் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர மாவட்டங்களில் 102 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 96.8 முதல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
சென்னை, புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.6 முதல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும்.
மழைக்கான முன்னறிவிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் புதன், வியாழன் (மே 8,9) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தருமபுரி) தலா 60, பையூா், நெடுங்கல் , பாரூா் (கிருஷ்ணகிரி) தலா 50, ஆம்பூா் (திருப்பத்தூா்), மேலாலத்தூா் (வேலூா்), தருமபுரி, வாணியம்பாடி நாட்டறம்பள்ளி (திருப்பத்தூா்) தலா 40.
13 இடங்களில் வெயில் சதம்: திருச்சி - 107.78, மதுரை விமான நிலையம் - 107.06, பரமத்தி வேலூா், பாளையங்கோட்டை - 106.7, மதுரை நகரம் - 106.16, ஈரோடு - 105.44, வேலூா் - 104.9, திருத்தணி - 104.18, தஞ்சாவூா், நாமக்கல் - 104, சென்னை மீனம்பாக்கம் - 101.48, சேலம் -100.94, கோவை - 100.4 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.