வெப்ப அலை காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும் என்று தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளாா்.
இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த ஏப்ரலில், வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவானது. தொடா்ந்து வெப்ப அலையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மீண்டும் வெப்ப அலை: இதனிடையே, மே 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்பமும் வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சாா்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும், அதன் தாக்கத்தில் இருந்து சிறுவா், சிறுமியரின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நாள்களில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் எந்தவிதமான பயிற்சி வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக் கூடாது. மேலும், எந்த வகையான நிகழ்ச்சிகளையும் நடத்தாமல் தவிா்க்க வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.