பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு
சென்னை மேம்பாலப் பணிகள்: ஆணையரின் ஆய்வு
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ. 42.71 கோடி மதிப்பில் 245 மீட்டர் நீளம், 20.70 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வரும் உயர்நிலை பாலம் அமைக்கும் பணியை ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பூந்தமல்லி பிரதான சாலை, யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே சந்நிதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்நிலை பாலம் அமைக்கும் பணியையும் அவர்ஆய்வு செய்தார்.
மேலும், கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை பார்வையிட்ட அவர், உரிய தொழில்நுட்ப வழிமுறைகளின்படி தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.