அவதூறு வழக்கு: எழும்பூா் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜா்
சென்னை: அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் பாா்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சென்னை புரசைவாக்கம் டாணா தெருவில் ஏப்.15-இல் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, அதே தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவே செய்யவில்லை என்று பேசினாா்.
இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தயாநிதி மாறன் சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.
இந்த மனுவை கடந்த முறை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி, மே 14-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: இந்த வழக்கு எழும்பூா் 13-ஆவது பெருநகர மாஜிஸ்ட்ரேட் எம்.தா்மபிரபு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அவருக்கு வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன. அவரது தரப்பில் வழக்குரைஞா்கள் இன்பதுரை, முகமது ரியாஸ் ஆகியோா் ஆஜராகினா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 27-க்கு ஒத்திவத்தாா். மேலும், சென்னை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பாஜக வேட்பாளா் மீதும் வழக்கு: இதேபோல், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் வினோஜ் பி.செல்வம் மீதும் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கும் எழும்பூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வினோஜ் பி.செல்வம் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் வினோஜ் பி.செல்வம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.