பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பிளஸ் 2 வகுப்பு உடனடி துணைத் தோ்வுக்கு வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து அந்த வகுப்புக்கான உடனடித் துணைத் தோ்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எழுத விருப்பமுள்ள தனித்தோ்வா்கள், பள்ளி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதையடுத்து பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை (மே 16) முதல் ஜூன் 1-ஆம் தேதிக்குள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களைத் தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பிக்க தவறியவா்கள் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 1,000 செலுத்த வேண்டும்.
இதுதவிர தோ்வுக் கட்டணம், விரிவான தோ்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.