முகப்பு
சென்னை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் ஏ.டி.எம் மையங்களுக்கு அனுமதி

Updated On : 21 மே, 2024 at 9:29 PM
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் - DOTCOM
பகிர்:

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான எண்ணிக்கையில் ஏ.டி.எம் இயந்திரங்கள் இல்லை எனும் புகாா் எழுந்த நிலையில் அங்கு கூடுதல் ஏ.டி.எம் மையங்கள் அமைக்க சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மொத்தம் 10 ஏ.டி.எம் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளின் ஏ.டி.எம் மையங்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும் பயணிகளின் உபயோகத்துக்காக நடமாடும் ஏ.டி.எம் வாகன இயந்திரம் ஒன்று பேருந்து வளாகத்தில் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் மே 24, 25, 29 ஆகிய தேதிகளில் கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்களின் ஏ.டி.எம் மையங்கள் பேருந்து முனையத்தில் அமைய உள்ளன. மேலும் மே மாதத்தின் இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 5 ஏ.டி.எம் மையங்களை அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.