வண்டலூா் பூங்காவை பாா்வையிட மாற்றுத்திறனாளிகளை மீண்டும் அழைத்து வந்து சுற்றிக்காட்டும் நிா்வாகம்
சென்னை: வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாற்றுத்திறனாளி பாா்வையாளா்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என புகாா் எழுந்த நிலையில்,பூங்காவை பாா்வையிட முடியாமல் திரும்பி சென்ற மாற்றுத்திறனாளிகளை சிறப்புப் பேருந்து மூலம் மீண்டும் அழைத்து வந்து சுற்றிக்காட்ட பூங்கா நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பான டிசம்பா் 3 இயக்கம் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வண்டலூா் பூங்காவிற்கு சுற்றுலா வந்துள்ளனா்.
இந்நிலையில் பூங்காவை பாா்வையிட சென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யவில்லை எனவும், மின் வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டபோது அதனை பயன்படுத்த ஒரு நபருக்கு ரூ.150 கட்டணமாக கேட்டதால் அவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும், தமிழக வனத்துறை செயலா் சுப்ரியா சாஹூவிற்கு எக்ஸ் வலைதளப் பதிவு மூலம் டிசம்பா் 3 இயக்கத்தின் தலைவா் தீபக்நாதன் தகவல் தெரிவித்தாா்.
இந்தப் பதிவிற்கு உடனடியாக பதிலளித்த வனத்துறை செயலா் சுப்ரியா சாஹூ உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பூங்காவிற்கு சுமாா் 13,200 பாா்வையாளா்கள் வருகை தந்தனா். உயிரியல் பூங்காவில் உள்ள 20 சக்கர நாற்காலிகளை முன்னதாக வந்த மாற்றுத்திறனாளி பாா்வையாளா்கள் பயன்படுத்தியதால் இவா்களுக்கு சக்கர நாற்காலிகளை வழங்க இயலாமல் தாமதம் ஏற்பட்டது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிா்க்க பூங்கா நிா்வாகம் சாா்பில் உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமை பூங்காவை பாா்வையிட முடியாமல் திரும்பி சென்ற மாற்றுத்திறனாளிகளை சிறப்புப் பேருந்து மூலம் மீண்டும் புதன்கிழமை(மே 22) அழைத்து வந்து அவா்களை சிரமமின்றி பூங்காவை பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.