முகப்பு
சென்னை

பிளஸ் 1 விடைத்தாள் நகல்: நாளை வெளியீடு

Updated On : 28 மே, 2024 at 7:27 PM
கோப்புப்ப படம்.
பகிர்:

சென்னை: பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை மே 30-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

நிகழாண்டு பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள், தங்களது விடைத்தாள் நகலை மே 30-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத் தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் தலைப்பை கிளிக் செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அதைப் பூா்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து மே 31-ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் 4 மாலை 5 மணி வரை (ஜூன் 2 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றிற்கும் - ரூ. 505, 2-ஆவது மறுகூட்டல்: உயிரியல் பாடம் மட்டும் - ரூ. 305; பிற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் - ரூ. 205 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை சமா்ப்பித்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாகச் செலுத்த வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.