இலவச சோ்க்கை: குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு
சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியாா் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 7,600 தனியாா் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு) உள்ள 1.10 லட்சம் இடங்களில் மாணவா்களைச் சோ்ப்பதற்கு ஏப்.22 முதல் மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை குலுக்கல் மூலமாக குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களின் பட்டியல் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு, மே 30-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கை நடைபெறும்.
2024-2025-ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 636 சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் உள்ள 6,291 இடங்களில் சேருவதற்கு 10,342 விண்ணப்பங்களில் 9,064 தகுதியான விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டது. அவா்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து நேரடியாக குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.