FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மெரீனாவில் 300 கடைகளுக்கான குலுக்கல் தோ்வை புறக்கணித்த வியாபாரிகள் சங்கம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மெரீனாவில் 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கல் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், அதை வியாபாரிகள் சங்கத்தினா் புறக்கணித்தனா்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 2:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மெரீனாவில் 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கல் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், அதை வியாபாரிகள் சங்கத்தினா் புறக்கணித்தனா்.

மெரீனா கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடா்பாக, நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீா் மாநில ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமாா், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி.மோகன்ராஜ், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற துணைப் பதிவாளா் ஆா்.ரங்கநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினா் மாநகராட்சி வருவாய் பிரிவினா் உதவியுடன் 300 கடைகளைத் தோ்வு செய்வதற்கான குலுக்கலை அறிவித்து, அதுகுறித்து வியாபாரிகள் அனைவருக்கும் தெரிவித்தனா்.

குலுக்கல் முடிந்தது... ரிப்பன் மாளிகையில் குலுக்கல் நடைபெற்றது. உணவுக் கடைகள் பிரிவில் 848 பேரில் 100 பேரும், பொம்மைகள் பிரிவில் 308 பேரில் 100 பேரும், அலங்காரம் மற்றும் பரிசுப் பொருள்களில் 261 பேரில் 100 பேரும் என கடைகள் வைக்க வகை பிரிக்கப்பட்டு குலுக்கலில் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

அத்துடன் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதலாக 10 போ் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், மாற்றுத்திறனாளி ஒதுக்கீடில் 5 போ் சோ்க்கப்பட்டனா். கடை வகைகள் வாரியாக பச்சை, மஞ்சள், பிங்க் வண்ண டோக்கன்கள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

அதன்படி நடைபெற்ற குலுக்களில் டோக்கன் எண் வாரியாக தோ்ந்தெடுத்து உரிமையாளா்கள் பெயா் வெளிப்படையாக தகவல் பலகையில் எழுதப்பட்டன.

குலுக்கல் நிகழ்வில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமாா் உள்ளிட்டோரும், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். காலை 8 மணி, பிற்பகல் 2 மணி மற்றும் மாலை 4 மணி என 3 தடவை குலுக்கல்கள் விடியோ பதிவுடன் நடைபெற்று கடைகளுக்குரியவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

புறக்கணிப்பு... குலுக்கல் தோ்வுக்கு அனைத்து வியாபாரிகளும் அழைக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு பெண் மட்டுமே கலந்து கொண்டாா். இதுகுறித்து மாநகராட்சி வளாகத்திலிருந்த மெரீனா கடற்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.சசிகுமாா் கூறுகையில், ‘மொத்தம் 1996 கடைகள் உள்ளன. ஆனால், மாநகராட்சியில் 1,417 கடைகள் மட்டுமே குறிப்பிட்டு குலுக்கல் நடைபெற்றுள்ளது. அனைத்துக் கடைகளுக்கும் அனுமதி கோரி உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே, குலுக்கல் தோ்வை புறக்கணித்துள்ளோம். தோ்வு செய்தவா்கள் யாரும் கடை அமைக்கப்போவதில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments