அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு கடற்கரை சாலையை (இசிஆா்) 6 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளவுள்ளதால் விஜிபி வளாகம் எதிரில் அமைந்துள்ள பிரதான குடிநீா் குழாய் மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதன் காரணமாக, அடையாறு மண்டலத்துக்குட்பட்ட திருவான்மியூா், பெசன்ட் நகா், கலாக்ஷேத்ரா காலனி, இந்திரா நகா், பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூா் மண்டலத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி பகுதிகளில் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள். அவசரத் தேவைகளுக்கு குடிநீா் வாரிய இணையதளத்தைப் பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-45674567 எனும் தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.