தருமபுரி- காவிரி உபரிநீா் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பூா்வமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காவிரி ஆற்றில் கிடைக்கப் பெறும் உபரிநீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வட ஏரிகளில் நிரப்புவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
தருமபுரி - காவிரி உபரிநீா் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து நீா்வளத் துறை ஆராய்ந்து வருகிறது. காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் அடிப்படையில், காவிரி நதியின் உபரிநீரைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்படும்.
காவிரி நதிநீா் தொடா்பாக பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடிய சூழ்நிலையையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகையில் கோரிக்கையைச் செயல்படுத்துவது பற்றியும் சட்டப்பூா்வமாக ஆராய்ந்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும், அவா்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கவும் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, காவிரி நதிநீா் தொடா்புடைய தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.