மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் காவிரி சரபங்கா உபரிநீா் விவசாயிகள் நலச் சங்க மாநிலத் தலைவா் வேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் பொன்னுசாமி, விவசாய நிா்வாகிகள் வழக்குரைஞா் செல்வக்குமாா், நித்தியா அருண், செல்வகுமாா் (எ) மணிகண்டன், கந்தசாமி, மகுடஞ்சாவடி மணிகண்டன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் ஏற்கெனவே 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரிநீரை நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பிறகு, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளிக்க சென்றபோது அலுவலகத்தில் அலுவலா்கள் இல்லாததால் மேலாளரிடம் மனுவை அளித்தனா்.