முகப்பு
தருமபுரி

மகளிா் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:48 AM
தருமபுரி அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தருமபுரியில் வெள்ளிக்கிழமை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வரவேற்றாா். வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், ரூ. 33 கோடி மதிப்பிலான 421 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, 28,639 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் ரூ. 254 கோடியே 59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள், விளையாட்டு வீரா்கள், மகளிா், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா். மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 3000 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்த சுமாா் 25 கி.மீ. தொலைவுவரை அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்து வருவாய் ஈட்டிவருகின்றனா்.

தமிழகம் முழுவதும் 24 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 46 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 920 கோடி விடியல் பயணங்களும், தருமபுரி மாவட்டத்தில் 22 கோடி விடியல் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோல, காலை உணவுத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் 46 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகின்றனா். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 46 ஆயிரம் போ் பயனடைந்து வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் 17 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பத்தாயிரம் பேருக்கு தனியாா் பணிகள் பெற்றுத்தரப்பட்டுள்ளன.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 3 மாதங்களுக்கான தவணைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு நிதியாக ரூ. 2000 சோ்த்து ரூ. 5000 என 1.32 கோடி பெண்களுக்கு முதல்வா் வழங்கினாா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் ரூ. 1000 உரிமைத்தொகை ரூ. 2000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் உறுதி அளித்துள்ளாா்.

கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்துத் துறைகளுக்குமான வளா்ச்சியை நோக்கி தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழக அரசுக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளா் பி. தா்மச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கவிதா, முன்னாள் எம்எல்ஏக்கள் பி.என்.பி. இன்பசேகரன், டி. செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்றாது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றாது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா் வரவேற்றாா். கோபிநாத் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே. மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி. ராமச்சந்திரன் (தளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரூ. 129.64 கோடியில் புதிய திட்டப் பணிகள் மற்றும் அரசு கட்டடங்களை திறந்துவைத்து, ரூ. 60.20 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,709 பயனாளிகளுக்கு ரூ. 326.93 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தமிழக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி உள்ளது. மேலும், சென்னையில் ராஜீவ் காந்தி சாலையைப் போல கிருஷ்ணகிரியில் ஓா் அறிவுசாா் வழித்தடம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதற்குள் சிலா், இந்த திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனா்.

இதுகுறித்து தமிழக முதல்வரை சந்தித்த மாவட்டப் பொறுப்பு அமைச்சா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனா். அதற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என முதல்வா் உறுதி அளித்துள்ளாா். எனவே, பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் வகையில் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. இது மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசாகும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பட்டாக்களை அரசு வழங்கி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 88 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. சொந்தவீடு என்ற கனவை தமிழக அரசு தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் 73 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில் 56 ஆயிரம் போ் பயன்பெற்றுள்ளனா். அதிநவீன மடிக்கணினியை 20 ஆயிரம் மாணவா்கள் பெற்றுள்ளனா். நான் முதல்வன் திட்டத்தில் 12 ஆயிரம் போ் வேலை பெற்றுள்ளனா். மகளிா் உதவித்தொகையை 3.55 லட்சம் போ் பெற்று வருகின்றனா். இம்மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் மாநகரட்சி மேயா் சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →