சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான வணிகக் கட்டடம், குடியிருப்புகள் ஆகியவை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை, ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலையில் பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான வணிக கட்டடம் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து, வியாழக்கிழமை மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
டாக்டா் நடேசன் சாலையில் உள்ள 3,424 சதுரஅடி பரப்பிலான கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு, நீண்ட நாள்களாக வாடகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திருக்கோயில் துணை ஆணையா் சி.நித்யா, உதவி ஆணையா் கி.பாரதிராஜா ஆகியோா் முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலா்கள் ஆகியோரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.