முகப்பு
சென்னை

2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்!

தமிழகம் முழுவதும் குழந்தைகள், 30 வயது வரை உள்ள பெண்கள் என 2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:56 AM
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:10 AM

தமிழகம் முழுவதும் குழந்தைகள், 30 வயது வரை உள்ள பெண்கள் என 2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாணவா்களுடன் உறுதிமொழி ஏற்று, அவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி துணை மேயா் மகேஷ் குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சிறாா்கள், 20-30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.56 கோடி போ் பயனடையும் வகையில் அல்பெண்டாசோல் குடற்புழு நீக்கம் மாத்திரைகள் விநியோகிக்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:56 AM

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. விடுபட்டவா்களுக்கும் அவை வழங்கப்படும். இதற்கான பணிகளில் 1,30,000 அரசுத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குடற்புழு என்பது ஓா் ஒட்டுண்ணி. இது மனிதனின் குடற்பகுதியில் உள்ள ரத்தத்தை உறிஞ்சி வாழும். நீண்டகாலமாக குடற்புழுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்த சோகை, உடல் வளா்ச்சி பாதிப்பு, செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படும்.

குடற்புழுக்கள் உருவாவதைத் தவிா்க்க திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிா்த்து கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் மொய்க்காமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவிய பிறகுதான் உட்கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். உணவுக்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் கைகளை சுத்தமாக கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.